Sunday, November 29, 2015

அப்பன் பாடியதும் ! சுப்பன் பாடியதும் !

அப்பன் பாடியதும் ! சுப்பன் பாடியதும் !
அப்பன் பாடியது !
முதல் சங்கத்தில் புலவனாகி தமிழாராய்ந்த தாழ் சடையானே பின்னர் மதுரையில் திருவிளையாடல் புரியும் பொருட்டு...! செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட சந்தேகமான "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?" என்பதற்கு மணம் உண்டு எனும் பொருளில் பாட்டெழுதி தருமி மூலம் நக்கீரனிடம் விளையாடிய கதை நாம் அறிந்ததே ! அப்பாடல் குறுந்தொகையில் இரண்டாம் பாட்டாய் இன்றும் உள்ளது !

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே"
தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உன்னும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.
சுப்பன் பாடியது !
பொய்யாமொழி எனும் புலவனொருவன் தன்னிடம் வந்து முருகன் மேல் பாட்டொன்று பாடக் கேட்டவரிடம் " அப்பனை பாடிய வாயால் சுப்பனை பாடேன் ! கோழியை பாடிய வாயால் குஞ்சைப் பாடேன் என்று கூற !
பின்னாளில் ஒரு முறை இவர் காட்டினூடே செல்லுங்கால் முருகன் வழிப்பறி வேடனாய் வழிமறிக்க !
பொய்யாமொழி “அப்பா! வேடனே, நான் புலவன்; என்னை இடர்ப்படுத்தாதே” என்று கூறினார்.
“என் மீது ஒரு கவி பாடு” என்றான் வேடன்
“உன் பேர் யாது?” என்று கேட்டார் புலவர்;
“என் பேர் முட்டை” என்றான்
"பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே என்பேதை செல்லற் கியைந்தனளே – மின்போலும்
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம் கானவேல் முட்டைக்குங் காடு"
நற்றாயிரங்கல் என்ற துறையில் முட்டையென்ற பேர் வருமாறு இப்பாடலைப் பொய்யாமொழி பாடினார்.
வேடனாக வந்த வேலன், “ஐயா! நின் பாடலில் பெருங்குற்றம் உளது. பால் நிரம்பிய கள்ளி தீப்பற்றி எரியும் கானகத்தில் ஈரமில்லாத வேலமுள் சாம்பலாகாமல் காலில் தைக்குமா? நான் உன்மீது பாடுகின்றேன் கேள்.”
"விழுந்ததுளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர்சுடும் என்றும் – செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே
பொய்யா மொழிப்பகைஞர் போல்"
என்று பாடினார்.
கோழியை பாடிய வாயால் குஞ்சைப் பாடேன் என்றனையே இப்போது முட்டையை பாடினையே ! என்று முருகன் தன்னுரு காட்ட புலவன் செருக்கழிந்தது !
இப்படி அப்பனும் சுப்பனும் பாடிய பாடல்கள் இன்றும் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன

0 comments:

Post a Comment